அக்கரைப்பற்று, கொரோனா தொற்றாளருடன் தொடர்புபட்ட 10 பேர் பொலன்னறுவை, தாமின்ன கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைக்கப்பட்டதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை ஊடகவியலளார்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “கட்டாரில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில் நோய் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பொலன்னறுவை தாமின்ன கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தொற்றுநோய்க்கு உள்ளானவர் மரண வீட்டில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் தனது வீட்டில் இருந்து வெளியேறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதை விடுத்து சகலரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் தொற்றுக்குள்ளான நபருடன் பலரும் பழகியிருப்பதால் அது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் 10 பேரை தற்போது அடையாளம் கண்டு குறித்த பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.