முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியாவின் WION க்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர, மீண்டும் மீண்டும் சோதனை செய்வது போன்ற ஜேர்மனியில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இலங்கை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட பூட்டுதலை இலங்கை ஓரளவு நீக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகப்போர் மற்றும் பிற நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையில் சோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் உள்ளதா என்பது தனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் சோதனை செய்யும் உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் முகமூடிகளை பெற அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.