பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானி!

0

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 40ஆம் அத்தியாயத்தில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றுக்கு பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிர்வாக மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்மாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருணாகல் அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதற்குள் உள்ளடங்கின்றது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.