வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

Published November 10, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஏனைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 4,434 பில்லியன் ரூபாவாகும்.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூலம் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு (634 பில்லியன் ரூபா) நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொது நிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 554 பில்லியன் ரூபாவாகும். பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் செலவுத் தலைப்புக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவுத் தலைப்புக்காக ஒதுக்கப்பட்ட 2.7 பில்லியன் ரூபாவைக் காட்டிலும் சுமார் 8 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

முக்கியமாக, 2026 ஆம் ஆண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 8.29 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமையே செலவுத் தலைப்பு இவ்வாறு அதிகரிப்பதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக 488 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2026 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை ஈடுசெய்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறக்கூடிய அதிகபட்ச கடன் வரம்பு 3,800 பில்லியன் ரூபா என ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த வரம்பை மீறக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *