“Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Published December 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 6 min read

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கடற்றொழில், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா உதவித்தொகைகளை, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், நாடு முழுவதும் இயங்கும் பாதுகாப்பு மையங்களின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றல், வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இழப்பீடு பெற உரிமை உள்ள எவரையும் தவிர்க்காமல் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார். இழப்பீட்டு செயல்முறை செயற்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காணும் பணிகள் தொடர்பாகவும், பிரதான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய வீட்டு திட்டங்கள் குறித்து தனியான திட்டத்தை தயாரித்து, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி மீள்குடியேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். வீட்டு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் போது இவ்வாறான அம்சங்கள் நியாயமான முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெரும் போகத்திற்கு விவசாயிகளை தயார்படுத்தும் நோக்கில், நீர்ப்பாசன கட்டமைப்புகளின் புனரமைப்பு, இழப்பீடு வழங்கல், விதை நெல் உள்ளிட்ட வசதிகள் வழங்கும் வேலைத்திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

அதேபோல், அனர்த்தத்தால் சேதமடைந்த கால்நடை பண்ணைகளுக்கான இழப்பீடு வழங்குதல், பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிக்க உதவுதல், மீன்பிடித் தொழிலை மீட்டெடுத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்தல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், அனர்த்தங்களின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *