வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாகுபாடு – முந்தல் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத் தொகைக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை, ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத் தொகைக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை, ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மதுரங்குளி கரிக்கட்டை–ஹிதாயத் நகர் மஸ்ஜிது முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, “நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் – எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்”, “பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம்”, “அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாவை உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வீடு சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் உண்மையாக பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் சேர்க்கப்படவில்லை என்றும், பட்டியல் தயாரிப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, பொலிஸார் அதனைத் தடுத்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர். இதன் காரணமாக, புத்தளம்–கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக மட்டுமே பயணித்தன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி, அவர்களின் குறைகளை அமைதியான முறையில் கேட்டறிந்தனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள், நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.மேலும், 25,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்காக பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்தக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையில் எவ்வித பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கச் செய்ய முயற்சி எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது, முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.