கிரவல் அகழ்விற்கு எதிராக கங்கன்குளம் மக்கள் ஆர்பாட்டம்
வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் நடைபெறும் கிரவல் அகழ்வை தடை செய்யக் கோரி, இன்றைய தினம் அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.
வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் நடைபெறும் கிரவல் அகழ்வை தடை செய்யக் கோரி, இன்றைய தினம் அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.
கங்கன்குளம் பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டம், அங்கிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக நகர்ந்து, அங்கு ஆர்பாட்டமாக தொடர்ந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கிரவல் அகழ்வு காரணமாக தங்களின் கிராமம் குன்றுகளும் குழிகளுமாக மாறி வருவதாகவும், கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக வழங்கப்படும் கிரவல் அகழ்வு அனுமதிகளை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதாகவும், அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இயற்கையை அழிக்காதீர்கள்”, “சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள்”, “எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்காகவா?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.