கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம்! இரா.சாணக்கியன் எம்.பி

கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம். இதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியற்

Published January 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 5 min read

கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம். இதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியற் குழப்பங்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வருடத்திற்கான செயற்பாடுகள், கட்சியினை வளப்படுத்தல், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.

அத்துடன் எதிர்வரும் காலங்களின் மக்கள் முகம்கொடுக்கும் பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி எவ்வாறு நகர்வது என்பது குறித்து இன்றை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதேநேரத்தில் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அமரர் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்களின் ஜனன தினத்தினைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் தற்போதைய நிலையில் முகநூல்களின் பரப்பப்படுகின்ற கட்சிக்கெதிரான கருத்துகள் தொடர்பில் மாவட்டத் தலைவரால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. திட்டமிட்ட ஒரு குழுவினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

விமர்சனம் இல்லாவிட்டால் நாம் வளர முடியாது. கட்சியின் சில உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம். ஆனால் உறுப்பினர்களிடம் நாம் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளச் சொல்லியுள்ளோம்.

இது ஜனநாயகக் கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

நேற்றைய அரசியற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொடர்பில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அரியநேத்திரன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக மீண்டும் அறிவித்தல் கடிதம் மாவட்டக் கிளையினூடாக அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுவான நிகழ்வுகளுக்கு அவர் வரலாம் போகலாம் அதைப் பற்றி எதுவும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்ற அடிப்படையிலேயே அவர் கருதப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அரியநேத்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக அவருக்குக் கடிதம் கிடைக்கவில்லை என்ற கதையெல்லாம் பரவுகின்றது. அது அவ்வாறு அல்ல ஒருவருடத்திற்கு மேலாக நீக்கப்பட்டு விட்டார். மட்டக்களப்பு கட்சி உறுப்பினர்கள் என்ற வகையிலே கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம்.

இதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியற் குழப்பங்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

கட்சியின் நிகழ்வுகளுக்கு அவர் வந்து போகலாம் அவரைத் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் கட்சியினால் தயார்ப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவரை அழைத்து கௌரவப்படுத்த முயற்சியெடுத்ததாகச் சிலர் கருதுகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *