ரூ. 3.2 பில்லியன் செலவில் கொழும்புக்கு ஒரு புதிய மேம்பாலம்

கொழும்பில் ‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து,

Published January 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

கொழும்பில் ‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (19) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் மூன்றாவது மேம்பாலமாக இந்த ‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இருந்து கொம்பனித்தெரு சித்தம் பலம் ஏ. கார்டினர் மாவத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 340 மீற்றர்கள் ஆகும். இதன் அகலம் 11 மீற்றர்கள்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையான வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு இணையாக, இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

“கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வணிகத் தலங்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஏராளமான ஹோட்டல்கள் இப்பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அந்த நெரிசலுக்கு தீர்வாக மூன்று மேம்பாலங்களை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டிலேயே நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் கட்டுமானப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது. பொலிஸ் மா அதிபருடன் நாம் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாக, பொலிஸ் குடியிருப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட்டு கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த முடிந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்பு 2,700 மில்லியன் ரூபா (2.7 பில்லியன்) செலவில் முடிக்கப்பட வேண்டிய இந்த மேம்பாலத்திற்கு, கட்டுமான தாமதம் காரணமாக மேலதிகமாக ஒரு பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருந்தது. இந்த மேம்பாலத்தின் கட்டுமானத்தை முடிப்பது மக்களுக்கு பெரும் வசதியாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும். கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *