சீனாவின் செயலிகளினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கை

0

சீனாவின் செயலிகளின் பயன்பாடுகள் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் இலங்கை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று இலங்கையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன செயலிகளின் பயன்பாடுகள் தொடர்பாக உலகளாவிய முன்னேற்றங்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவும், இந்தியாவும் டிக்டொக் உட்பட பல சீன செயலிகளின் பயன்பாடுகளை தடை செய்துள்ளன.

இதனையடுத்து உலகளாவிய நிலைமையை கண்காணித்து வருவதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஓஷத சேனநாயக்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு செயலியின் பயன்பாட்டையும் கண்காணிக்க இலங்கைக்கு வசதிகள் இல்லை. எனினும் இது தொடர்பாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீன செயலிகள் குறிப்பாக டிக்டொக் குறித்து தமக்கு எந்த முறைப்பாடும் வரவில்லை என்று ஓஷத சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் செயலிகளது பயன்பாடுகளுக்கு எதிராக சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இதுபோன்ற பயன்பாடுகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உணரப்படும் வரை, இலங்கை அதனைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று சேனநாயக்க மேலும் குறிப்பிட்டார்.