எமது எதிர்கால சமூகமே புதிய அரசியலமைப்பு ஊடாக பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றது : இரா.சாணக்கியன்

0

எமது எதிர்கால சமூகமே புதிய அரசியலமைப்பு ஊடாக பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனிவரும் காலங்களில்தான் இந்த அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்புகள் ஏற்படப்போகின்றன. இங்கிருக்கின்ற சிறுவர்களின் எதிர்காலம்தான் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்படையப்போகின்றது.

1978ல் ஒரு அரசியலமைப்பினை உருவாக்கியிருந்தார்கள். அந்த அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல்வாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 1990ஆம் ஆண்டுகளில் மரணித்துவிட்டனர். 2020ஆம் ஆண்டில்கூட அன்று உருவாக்கிய அரசியலமைப்பின் விளைவுகளை நாங்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கின்றது.

எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளவேண்டியது இன்றைய சிறுவர்களாகிய நீங்கள் என்ற வகையில் உங்களுக்கும் அரசியல் ஆர்வம் வரவேண்டும். எங்களுடைய சகோதர சமூக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் இருக்கின்றது. அதிகமானவர்கள் அரசியலில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற அரசியலமைப்பான 20ஆவது திருத்தச்சட்டம் அவசரமான முறையில் ஒருசிலருக்கு விரும்பிய வகையில் இந்த நாட்டில் கொண்டுவருகின்றனர் என்பது நீங்கள் அறிய வேண்டிய விடயமாகும். இது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கின்ற விடயமாகும்.

மிக அவசரமாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்தால் எங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும். சிலவேளைகளில் அந்த அரசியலமைப்பினூடாக நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வது தொடர்பில் சில மாற்றங்கள் வரலாம்.

இந்த நாட்டின் பொதுமக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது, மாற்றுவது இந்த அரசியலமைப்பு என்ற விடயமாகும். நாங்கள் இந்த நாட்டின் தமிழர்கள் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இந்த அரசியலமைப்பினூடாக எவ்வாறு நல்ல விடயங்கள நாங்கள் பெறலாம் என்பது தொடர்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக படித்துக்கொண்டிருக்கின்றோம். இதுதொடர்பில் எதிர்காலத்தில் விவாதங்கள் வருகின்றபோது நிச்சயமாக நாங்கள் பேசுவோம்.

இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையீடு செய்யும் நிலை காணப்படுகின்றது. நேற்றைய தினம்(30) ஒரு பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் நான் உரையாடியிருந்தேன். அந்த பிரதேச செயலாளர் மிகவும் மனவருத்தத்துடன் கதைத்தார்.

ஏனென்றால் அந்த பிரதேசத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், சிலவேலைத்திட்டங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளுடைய பெயரைச் சொல்லி அவர்களுடைய சிறுவால்கள் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து தங்களுடைய வேலைத்திட்டங்களை செய்யும் காலம் திரும்பவும் உருவாகிக்கொண்டிருக்கின்றது.

ஒரு அரச அதிகாரியை எட்டாம் வகுப்புகூட படித்திராத நபர் சென்று அதிகாரம் செய்வது பிழையான விடயமாகும். இப்படியான விடயங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் சிறுவர்களிடத்தில் இப்போதிருந்தே அரசியல் ஆர்வம் வரவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் கடந்த 70வருடமாக தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுவந்துள்ளனர்.

வருங்காலத்தில் சிறுவர்களின் நலன் கருதி கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.