சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார்! ஜனாதிபதி

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான

Published February 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 8 min read

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக நிறுவன மட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான உலகளாவிய கொள்கைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) உருவாக்குகிறது. மேலும், பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான கொள்கைகளையும் இது உருவாக்குகிறது.

அதன்போது, அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய 40 பரிந்துரைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள கட்டமைப்புகள், அவை வினைத்திறனாக செயல்படுத்தப்பட்டுள்ள விதம், சட்டக் கட்டமைப்பு, வள ஒதுக்கீடு, செயல்திறன் மற்றும் தரப்பினர்களின் இயலுமை உள்ளிட்ட அளவுகோல்கள் தொடர்பாக ஆழமான பகுப்பாய்வு இடம்பெறும். இந்த செயல்முறை பரஸ்பர மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு தேசிய அளவிலான கணக்காய்வு செயல்முறை என்பதுடன், குறித்த பிராந்திய மேற்பார்வை நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதன்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவினால் இலங்கையில் அந்த மதிப்பீட்டு மேற்பார்வை செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கான ஆலோசனையை அதன் முன்னாள் நிறைவேற்றுச் செயலாளரான கலாநிதி Gordon வழங்குகிறார். உள்நாட்டில் இந்தச் செயல்பாட்டிற்காக சுமார் 25 தரப்பினர் அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் அதன் ஒருங்கிணைப்புப் பணிகள், இலங்கை மத்திய வங்கியில் நிறுவப்பட்ட நிதி புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான செயற்பாட்டுக் குழுவினால், குறித்த மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்களால் செயல்படுத்தப்பட வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

இலங்கை இதற்கு முன்பு 2006 மற்றும் 2014-2015 ஆம் ஆண்டுகளில் இந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதுடன், அதில் பின்னடைவை சந்தித்து 2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கருப்புப் பட்டியலில் (Greylisted) சேர்க்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச அளவில் இலங்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வலுவான அரசியல் தலைமையை வழங்குவதால், இந்த திட்டத்தை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதி வெற்றிபெறச் செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தாமதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த விடயங்களை தாமதப்படுத்தாமல் தேவையான தொழில்நுட்ப திருத்தங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

பல அரச நிறுவனங்களில் மனிதவளப் பற்றாக்குறை மதிப்பீட்டுச் செயல்முறைக்குத் தடையாக உள்ளதாகத் தெரியவந்ததோடு, தற்போதுள்ள அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும், நிர்வாக தாமதங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

ஒரே அதிகாரி பல பதவிகளில் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களை சீர்செய்வதற்கும், பொதுச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளை விரைவுபடுத்துமாறும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, மதிப்பீட்டுச் செயல்முறைக்காகப் பயிற்சி பெற்ற அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்வதால் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க, அடுத்த நவம்பர் மாதம் மதிப்பீடுகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே பதவிகளில் பணியாற்றும் வகையில் சுற்றறிக்கை வெளியிடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த மதிப்பீட்டு செயல்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சிறப்பு செயலணியின் (Task Force) அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உட்பட அமைச்சின் செயலாளர்கள், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டவரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *