வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

வளமான நாடு - அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க

Published February 4, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 6 min read

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும்.

அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும்,கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம்.

நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்துஇ அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் இபெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும், இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன்.

இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *