உயர் நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்படும் தீர்மானங்கள் ஒரு கண்ணாடி போன்றது!

உயர் நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்படும் தீர்மானங்கள இந்நாட்டின் நீதி ஜனநாயகம் மற்றும்

Published February 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

உயர் நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்படும் தீர்மானங்கள இந்நாட்டின் நீதி ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இலங்கையின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகாமை ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உயர் நீதிமன்றத்தின் அசல் தோற்றம் மற்றும் அமைப்பைப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 07 புதிய நீதிமன்ற அறைகள் (ஒற்றைஇ ஏழு பேர், ஐந்து பேர் மற்றும் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வுகளுக்காக) சேர்க்கப்பட்டுள்ளன.

நீதிபதிகளுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள், ஊழியர் வசதிகள், மின்தூக்கி, நவீன நூலகம், வழக்கு ஆவணக் காப்பகம் மற்றும் கேட்போர் கூடம் என்பனவும் இதில் உள்ளடங்கும்.

அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா அமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த வளாகத்தை மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நவீன மயமாக்குவது மிகவும் முக்கியமான ஒரு படியாகும்.

நீதித்துறை உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது என்பது உண்மையில் பொதுமக்களின் நம்பிக்கையில் முதலீடு செய்வதாகும். பாதுகாப்பான மற்றும் திறமையான சூழல் நீதித்துறையின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் மேலும் பலப்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங், சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *