மேல் மாகாணத்தில் இன்று முதல் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அமுல்

0

மேல் மாகாணத்தில் வீட்டில் பணியாற்றும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கான சுற்றறிக்கை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால், அனைத்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர், மாகாணங்களின் பிரதான செயலாளர், மாவட்ட செயலாளர்கள், திணைக்களத்தின் பிரதானிகள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்தினதும் தொலைதூரத்தில் செய்யக்கூடிய பணிகளையும், வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய பணியாளர்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்படும்.

அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் உபகரணங்கள் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொது மக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் அதற்கான தளத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய அளவில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டாலும் எந்தவொரு பணியாளருக்கும் எந்த ஒரு பணியையும் ஒதுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.