நாட்டு மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள இராணுவத் தளபதி

0

இலங்கையில் கொரோனா வைரஸ் எல்லை மீறும் நிலையில் உள்ளது. இதை உடனடியாகக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் எவரும் வீட்டுக்கு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். அதனூடாகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மேல் மாகாணத்தில் கொரோனாப் பரவல் அதிகரித்ததால் அம்மாகாணத்தை முடக்கியுள்ளோம். ஏனைய மாகாணங்களில் சில கிராமங்கள் மட்டும் முடக்கப்பட்டுள்ளன. கொரோனாக் கொத்தணிப் பரவலைத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

முழு நாட்டையும் முடக்கினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். அதனைக் கருத்தில்கொண்டே நாம் செயற்படுகின்றோம். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஒரு புறமிருக்கப் பட்டினியால் மக்களை சாகடிக்க நாம் விரும்பவில்லை. நாட்டை முழுமையாக ஏன் முடக்கவில்லை என்று கேட்பவர்களிடம் இந்தப் பதில் கருத்தைச் சொல்ல விரும்புகின்றோம்.

எனினும், கொரோனா எல்லை மீறிச் சென்றால் முழு நாட்டையும் முடக்குவது தவிர்க்க முடியாது. இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க மக்களின் ஒத்துழைப்பு எமக்கு மிகவும் அவசியமாகும். அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் எவரும் வீட்டுக்கு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும்.

சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றுச் சந்தேகநபர்கள் பி.சி.ஆர். பரிசோதனையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் விதிமுறைகளை மீறிச் செயற்படாமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.