நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது

Published February 18, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 5 min read

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும் பயங்கரவாதச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் கொண்டு வந்த பிரரேணை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்பு மத்தியில் சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரரேரணையினை முன்வைத்து தவிசாளர் ப.மயூரன் உரையாற்றும் போது,

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்பதனையும் தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்பதனை இச் சபை ஏகமனதாக தீர்மானமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.

குறித்த விடயத்தினை அமுலாக்கம் செய்தல் அல்லது நீக்குதல் என்பன உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனையும் அது பாராளுமன்றத்துடன் தொடர்புடையது என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.

ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக இல்லாதொழிப்போம் என்ற வாக்குறுதியினை மக்களுக்கு வழங்கி அதன் மூலம் தமிழ்மக்களினதும் சிங்கள மக்களினதும் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை விட மிக மோசமான பயங்கவரவாத சட்ட வரைபினை முன்வைத்துள்ளது.

குறித்த சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக இணங்கவில்லை அது சர்வதேச சட்டங்களுக்கு முரணாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சட்ட வரைபு தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கோரியுள்ளார்.

அதன் அடிப்படையில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இச் சபை அவ் மக்களுக்கு இடர்கள் ஏற்படுகின்ற விடயங்கள் கொண்டுவரப்படுகின்ற போது அதற்கெதிராக கண்டனக்குரல் எழுப்பவேண்டியதும் எமது மக்களின் எண்ணங்களினை பிரதிபலிபவர்களாக நாம் இருக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் எமக்கே உரித்தான கடமையாகும் .அக் கடமையினை நன்குணர்ந்து அரசாங்கத்தினால் முன்னொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்பதனை அச் சபை ஏகமனதாக தீர்மானிக்க வேண்டும்.

அத்துடன் இவ் புதிய சட்ட மூலத்தினை அமுல்படுத்தக் கூடாது என்று எழுகின்ற எதிர்ப்பலைகளை தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு குறித்த புதிய சட்டமூலத்தினைக் கைவிட்டு பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினைத் அப்படியே தொடர்ந்து தொடரக்கூடிய கபட எண்ணமும் இந்த அரசிடம் காணப்படுகின்றது.

எனவே அதைவிடுத்து தமிழ்மக்களை மட்டுதல்ல சிங்களவர்களையும் குறிப்பாக இன்று பதவியில் இருக்கும் ஜேவிபி அரசாங்கத்தினருக்கும் அன்றைய காலங்களில் பல கொடுமைகளைப் புரிந்த கொடிய பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதனையும் இச் சபை ஏகமானதாக தீர்மானிக்க வேண்டும் என்றார்

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *