எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது – சாணக்கியன்

0

எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர்.

நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்புவாக்களை பெற்றுக் கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதான அரச ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் சில பதிவுகள் டக் செய்யப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்துள்ள அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை பொலிஸார் கைசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும்.

இவர்களை கைது செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை கைது செய்து சிறையிலடையுங்கள்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

அதேபோன்று அரசாங்கம் ஏனைய விடயங்களை மறைப்பதற்ககாக இவ்வாறு அப்பாவி இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்த்தீகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்தீகை விளக்கேற்ற தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்கினை ஏற்றுவதற்காக சிறிய அழங்காரங்களை செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றிய போது. சரத்வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட முடிந்ததாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சனைகளை உறுவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து சஹ்ரானை உறுவாக்கியதாக கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உறுவாக்கினீர்கள்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையினையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. “ எனக் குறிப்பிட்டுள்ளார்.