வடக்கு- கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்

0

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கந்தர மீன்பிடித்துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் காஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளதாவது, “நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருக்கின்றன.

எனவே அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு- கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

மேலும், 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தில் கந்தர் துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.