இந்திய முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கிறோம்: பிரதமர் ஹரிணி!

இலங்கை நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் வேளையில், பொருளாதார மற்றும்

Published February 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 5 min read

இலங்கை நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்பதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (26) நடைபெற்ற இந்தியாவின் 77-வது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை – இந்திய சங்கம் (Sri Lanka India Society) ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்டம் மற்றும் இராப்போசன விருந்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது இலங்கை – இந்திய சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகை வெளியீடு மற்றும் “Port of Call” நூல் பிரதமரிடமும் உயர்ஸ்தானிகரிடமும் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை-இந்திய சங்கம், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பங்களிப்பு செய்துள்ளது. கலாசார பங்களிப்பு மற்றும் உரையாடல்கள் மூலம், அரசாங்கங்களுக்கு இடையே மட்டுமல்லாது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளைப் பேணுவதற்கு இந்தச் சங்கம் பாடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டில், இந்திய – இலங்கை இருதரப்பு உறவின் பலத்தை மீண்டும் ஒருமுறை கண்டோம். குறிப்பாக, தேவனிமோரி (Devnimori) புனித சின்னங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும், அவற்றின் காட்சிப்படுத்தலுக்கும் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல், ‘திட்வா’ (Ditwa) சூறாவளி இலங்கையைத் தாக்கிய போது, ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) நடவடிக்கை மூலம் முதற்கட்டமாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் பாராட்டுக்குரியவை.

இலங்கையின் மீள் எழுச்சிப் பணிகளுக்காக 454 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நீண்டகால நிவாரணப் பொதியை அறிவித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிலையான வளர்ச்சியை நோக்கிய எமது பயணத்தில் இந்தியா நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்பு என பல துறைகளில் எமது கூட்டுறவு விரிவடைந்துள்ளது. இந்திய வணிகங்களின் மேலதிக முதலீடுகளையும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியா எமது நெருங்கிய அண்டை நாடு மற்றும் முக்கியமான பங்காளியாகும். பிராந்தியத்தின் நன்மைக்காக இந்த ஒத்துழைப்பைத் தொடர இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தூதுவர்கள், இராஜதந்திரிகள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *