பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!

பட்டயப் பத்திரிகையாளர் கழகத்தை நிறுவுவதற்கான முன்மொழியப்பட்ட மசோதாவானது, ஊடகத் துறையின் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் அழைப்பு விடுக்கிறது.
இது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய அணுகுமுறை என சுதந்திர ஊடக இயக்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த நிறுவனம், ஊடக சமூகத்தின் கூட்டுத் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல, மாறாக இது மற்றுமொரு அரசாங்க நிறுவனம் மட்டுமே என்றும், இதை நிறுவுவதற்காக நியமிக்கப்படும் இடைக்காலக் குழு கூட, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்தின் செயலாளரின் நேரடித் தலையீட்டின் மூலமே நியமிக்கப்பட வேண்டும் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது
.
அரசியல் நலன்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு, பத்திரிகையாளர்களின் நெறிமுறைகள், ஒழுக்கம் மற்றும் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் தீவிரமான ஒரு சூழல் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு, முடிவுகளை எடுப்பதற்குப் போதுமானது. ஆனால், நாட்டிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு மூன்று உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதே இங்குள்ள அபாயகரமான நிலை என சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிடுகிறது.
‘தொழில்முறை பத்திரிகையாளர்’ யார் என்பதை வரையறுக்கும் அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம், இந்த மசோதா ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிமைச் சமூகம் மற்றும் ஊடக சமூகத்துடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஒரு தேசிய ஊடகக் கொள்கையின் அடிப்படையில் அத்தகைய அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.




