ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க தாக்குதல்!

ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.
அந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஏவிய ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாகவும், இந்தத் தாக்குதல்களில் எந்த அமெரிக்க வீரரும் காயமடையவில்லை என்றும் ஜோர்டானியப் பாதுகாப்புப் படைகள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான் வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த, ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய்க் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் அருகே பயணித்த மற்றொரு கப்பலும் அமெரிக்கப் படைகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள், IRGC மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு நிதியளிக்கும் ஒரு இரகசிய நிதி வலையமைப்பிற்குச் சொந்தமானவை என்று அமெரிக்கா கூறுகிறது.
இதற்கிடையில், ஏமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி தீவிரவாதிகள் சவூதி அரேபியாவில் உள்ள எரிசக்தி மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 73 பேர் காயமடைந்துள்ளதாகவும், எண்ணெய் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் இராணுவச் சூழல் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.




