மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை எப்போது குறைக்க முடியும்? என்பதை தற்போது குறிப்பிட்ட காலவரையறையுடன் தெரிவிக்க முடியாது என, எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களையும், மின்கல சேமிப்பு திட்டங்களையும் அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் மின்சார உற்பத்திச் செலவு தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, உற்பத்திச் செலவு குறையும் நிலையில், அதற்கேற்ப மின்சாரக் கட்டணக் கணக்கீடுகளிலும் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மின்சாரக் கட்டணம் இவ்வளவு சதவீதம் குறையும் என தற்போது கூற முடியாது எனவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் கிடைக்கும் பயன்கள் கட்டண நிர்ணய நடைமுறை ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




