TIN இலக்கத்தை ஆன்லைனில் பெறலாம்

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தவிர்த்து, இணையத்தளம் (Online) மூலம் அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ.பி.குணதுங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைப் பகிர்ந்துள்ளார்.
புதிய வங்கிக் கணக்கு, மோட்டார் வாகனப் பதிவு, நிலப் பதிவு மற்றும் கடன் அட்டைகளைப் பெறுவதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் www.ird.gov.lk இணையத்தளத்தில் OTP மூலம் தங்கள் இலக்கத்தைப் பார்க்க முடியும் என்றும், புதியவர்கள் அதே இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். புதிய பதிவுகளுக்கான சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலதிக விபரங்களுக்கு 021-2217333 என்ற இலக்கைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




