அணுசக்தி ஒத்துழைப்பில் அமெரிக்கா–சவூதி புதிய அத்தியாயம்!

அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலர் கிறிஸ் ரைட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும், ‘அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், சவூதியின் அணுசக்தித் திட்டத்திற்கான அணுகலை விரிவுபடுத்தும் என அமெரிக்க எரிசக்தித் துறை அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியாவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை அமைதியான நோக்கங்களுக்காகவும் எரிசக்தி உற்பத்திக்காகவும் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் எரிசக்தி உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும், மேலும் எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு கூடுதலாக, இரு நாடுகளும் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் உறுதி ஒப்பந்தத்திற்கும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.




