வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!

நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அதன் 24 மணி நேர அவசர உதவி எண் (+9779851048653) அல்லது மின்னஞ்சல் வழியாக உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திபெத்திலிருந்து பாயும் (போட்டே கோஷி) மற்றும் (திரிசூலி) ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம், ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா மற்றும் சித்வான் ஆகிய அதிக அபாயம் உள்ள மாவட்டங்களில் அல்லது அதன் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பேரழிவில் 162 பேர் உயிரிழந்ததாகவும், 579 பேரைக் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நிலச்சரிவு மற்றும் பனி உருகுதல் ஏற்பட்டு, போட் கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்றில் ஏற்பட்ட பெருக்கினால், தலைநகர் காத்மாண்டுவின் வடக்கே உள்ள ரசுவா பகுதியை கடுமையான வெள்ளம் அடைந்து, பல கிராமங்களை முற்றிலுமாக மூழ்கடித்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மலேசிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அவர்களில் அடங்குவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




