ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தளமான சென்ட்காம், ஈரானிய படைகளின் இராணுவத் திறனைக் குறைக்கும் நோக்கில் ஈரானுக்கு எதிராகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்கும் வகையில், ஈரானின் 140 இராணுவ இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா தனது 3-வது சுற்றுத் தாக்குதல்களை நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இத்தாக்குதல்கள் நிலம் மற்றும் கடல்வழி போர் விமானங்கள், ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்) மற்றும் கடற்படை கப்பல்களின் உதவியுடன் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




