ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரண சேதம் குறித்து Turkish Airlines உடன் பேச்சு!

World Athletics Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலகச் செம்பியன் ருமேஷ் தரங்க, நாடு திரும்பியபோது அவரது ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபையின் வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை விரைவாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்தக் கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்திப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்திப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகளும் Turkish Airlines நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




