வெறும் புகழ்ச்சிகளால் மாற்றத்தை உருவாக்க முடியாது – அமைச்சர் கே.டி. லால் காந்தா!

நாட்டின் விவசாயத் துறையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர, விவசாயிகளும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் வெறும் புகழ்ச்சிகளால் மட்டும் அந்த மாற்றத்தை அடைய முடியாது என்றும் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். நாடு மாற்றத்தின் காலகட்டத்தில் உள்ளதால் அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் உர விலை உச்சத்தில் இருந்தபோது விவசாயிகள் உயர் விலை கோரியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசு உர மானியத்தை அதிகரித்துள்ளதால் நிலைமை மாறியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நெல் விலை நிர்ணயம் தன்னிச்சையாகவன்றி, அறிவியல் பூர்வமான முறையிலேயே கூட்டு நிறுவனங்களின் செலவுக் கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும், அரிசி விலை தொடர்பாக தற்போது நுகர்வோருக்குப் பிரச்சினைகள் ஏதுமில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.




