ஆசிரியர்களுக்கு வினைத்திறன் பரீட்சையில் சலுகை!

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்கள், வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், இந்தத் தடைத்தாண்டல் பரீட்சையை அடுத்த தரமுயர்வைப் பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் தரம் உயர்த்தப்பட்ட தரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய வினைத்திறன் தடைத்தாண்டலை அடுத்த தரமுயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தரமுயர்வு பெற்ற அதிகாரிகளை, அத்தகைய முந்தைய தரத்தின் வினைத்திறன் தடைத்தாண்டலைப் பூர்த்தி செய்யும் தேவையிலிருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025/06/30 திகதி முதல் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தாம் சார்ந்த தரத்திற்குரிய வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தரமுயர்வைப் பெறும் அதிகாரிகளுக்கும், தொகுதிகள் (Modules) / வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதைக் கவனத்திற் கொள்ளாது தரமுயர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
• முதலாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2494 மற்றும் 2026/06/19 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும்,
• இரண்டாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2498 மற்றும் 2026/07/17 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும், •
மூன்றாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2503 மற்றும் 2026/08/21 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் பரீட்சைகள் நடைபெறும்.
இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்தி கல்விச் சுற்றறிக்கையொன்று எதிர்காலத்தில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலக்கம் 2444/21 மற்றும் 2025/07/08 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




